Where did we celebrate Shri Jayanthi this year?

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

சென்ற முறை சோழங்கநல்லூர் சென்றிருந்த பொழுதே, அங்குள்ள குழந்தைகளுக்கும், ஆ நிரை காத்த பெருமாளுக்கும் ஶ்ரீ ஜெயந்திக்கு வருவதாக வாக்கு கொடுத்திருந்தோம். சொன்னபடிக்குச் செய்யவில்லை என்றால் சின்னக் கண்ணன் கோபித்துக்கொள்வானே என்று கண்ணன் பிறந்த மறுதினம் உரியடிக்கப் புறப்பட்டோம்.

வானம் பார்த்த பூமி என்பதால் ஆவணி மாதம் உழவு ஓட்டி மழைக்காக மக்கள் காத்திருந்தார்கள். Cell Phone Cameraவில் காட்டும் Seripa Tone போல கண்ணுக்கு எட்டிய வரை செம்மண் பூமி. நடுவில் அழகான சின்னக் கண்ணன் ! சில் என்ற காற்றோடு, மழை கொஞ்சம் கண்ணாமூச்சி காட்டிய மாலை வேளையில், மண் வாசத்தோடு மாடு மேய்க்கும் இடையனைக் கொண்டாடினோம் !

முதலில் கோபால கிருஷ்ணனை குளிரக் குளிர நீராட்டினோம். பிறகு திருவரங்கப்பத்தி மாலையோடு பூச்சூட்டல். கிராம மக்கள் 170 பேருக்கு மேல் வந்திருந்தனர். குழந்தைகளோடு நிறைய கதை பேசினோம். கண்ணன் கதை, இராமானுசர் கதை எல்லாம் பேசி, நன்றாகப் பதில் சொன்னவர்களுக்கு சின்னப் பரிசு தந்து ஊக்கப்படுத்தினோம். எதிரே வானவில் வந்திருந்தது ! “நீங்கள்லாம் வானவில் பாத்திருக்கீங்களா” என்று குழந்தைகளைக் கேட்டோம். “இவங்கள்லாம் மழையவே பாத்ததில்லை சாமி” என்று பெரியவர் ஒருவர் வானத்தைப பார்த்துக்கொண்டே சொன்னார்.

குழந்தைகளில் சிலர் கண்ணன் ராதை வேஷம் போட்டு வந்திருந்தனர். கலப்படம் இல்லாத சுத்தமான வெண்ணை கொண்டு வந்திருந்தனர். அப்பழுக்கற்ற பக்தி! ஊர் கூடி எல்லோரும் வந்திருந்ததது மகிழ்ச்சியாக இருந்தாலும், சிதிலமான கோயிலைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆண்டாள் சொன்னது போல “அறிவொன்றிலாத ஆய்க்குல” மக்கள் நாம் என்ன செய்து விட முடியும் என்று தோன்றியது. அவனை சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், கோயிலைச் சுற்றி பஜனை பாடிக்கொண்டே வலம் வந்தோம். பானை கட்டி உரியடித்தோம். ஒன்றாகத் தரையில் அமர்ந்து லட்டும், சுண்டலும் ப்ரசாதமாகச் சாப்பிட்டு விட்டு, எல்லோரும்கண் மூடி மழைக்காகவும், கோயில் திருப்பணிக்காகவும், ஊர் நன்மைக்காகவும் மனமுருகி கூட்டுப்ப்ரார்த்தனை செய்தோம். கண்ணன் செவிமடுத்து நிறைவேற்றி வைப்பான் என்று நம்புவோம்!

இந்த மாதிரி கிராமங்களில் தொடர்ந்து ப்ரசாரம் செய்வதற்கு, உங்களுடைய பங்களிப்பும் முக்கியம். நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள், மனமிருந்தால் உதவலாம் –  Click Here to Sponsor Books

Quick Buy